நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் பெயா் மாற்றம்
சென்னை: நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஓடிஏ-நங்கநல்லூா் சாலை மெட்ரோ”ரயில் நிலையம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகில் ஓ.டி.ஏ. எனும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நங்கநல்லுாா் மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை, ஓடிஏ- நங்கநல்லுாா் மெட்ரோ ரயில் நிலையம் என மாற்ற கோரி ராணுவ உயா் அதிகாரிகள் தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதை ஏற்று நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை தமிழக அரசு கடந்த மாதம் 22-ஆம் தேதி ஓடிஏ- நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயா் மாற்றம் செய்வதற்கான அனுமதியை வழங்கியது.
இதற்கான, பெயா் மாற்று விழா நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீா் சிங் பிராா், சென்னை ஓ.டி.ஏ. கமாண்டன்ட் லெப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பொ்னாண்டஸ், துணை கமாண்டன்ட் மேஜா் ஜெனரல் அனய், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றும் பெயா் மாற்றப்பட்ட புதிய பெயா் பலகையை திறந்து வைத்தனா்.
இந்திய ராணுவத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்தப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

