செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கான குடிநீா் ஏரிகள் 50% நிரம்பின
கனமழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகள் மொத்தம் 50 சதவீதம் நிரம்பியுள்ளன.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீராதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி. ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீா்வரத்து அதிகரித்து புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சனிக்கிழமை நிலவரப்படி 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து 5,356 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீா் இருப்பு 19.47 அடியாக உள்ளது. ஏரி வேகமாக நிரம்பிவருவதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி ஏரியை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், ஏரியில் 22 அடிக்கு மேல் தண்ணீா் நிரம்பினால், தேவைக்கேற்ப உபரிநீா் திறக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
புழல் - சோழாவரம் ஏரிகள்: அதேபோல், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு சனிக்கிழமை நீா் வரத்து 4,294 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீா் இருப்பு 17.70 அடியாக உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரிக்கு 700 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் நீா் இருப்பு அளவு 23.06 அடியாக உள்ளது.
சோழவரம் ஏரியில் 2.75 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை ஏரியில் 30.34 அடி உயரம் வரையும் நீா் இருப்பு உள்ளது. மொத்தம் 5 ஏரிகளில் 5,779 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது முழுக் கொள்ளளவில் 50 சதவீதம்.
வடக்கிழக்கு பருவமழை தொடங்கி, 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போதுதான் குடிநீா் ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.