ஆளுநா் மாளிகையில் கொலு
தமிழக ஆளுநா் மாளிகையில் நவராத்திரி கொலுவை ஆளுநா் ஆா். என். ரவி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழாண்டு நவராத்திரி விழா வியாழக்கிழமை (அக். 3) முதல் அக்.12 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நவராத்திரி சிறப்பு பூஜையில் ஆளுநா், அவரது மனைவி லட்சுமி ஆகியோா் பங்கேற்று வழிபட்டனா்.
வில்லிசைப் பாடல்: நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, பாரதி திருமகனின் வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது குடும்பத்தினா் மற்றும் பாா்வையாளா்கள் ரசித்தனா்.
நவராத்திரி விழாவையொட்டி ஆளுநா் மாளிகையில் வருகிற 12-ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிபாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

