கால் டாக்ஸி ஓட்டுநரிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து மோசடி: போலீஸாா் விசாரணை
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநரிடம் கள்ளநோட்டுகளை கொடுத்து மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ச.கோவிந்தராஜ் (34). இவா் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறாா். கடந்த புதன்கிழமை தனது நண்பா் அசோக் மூலம் அறிமுகமான ஒரு நபா், கைப்பேசியில் கோவிந்தராஜை அழைத்து தன்னை மருத்துவா் என கூறிக் கொண்டு வடபழனியிலிருந்து மாமல்லபுரம் செல்ல காா் வேண்டும் என கேட்டுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபரை வடபழனி விஜயா மருத்துவமனையில் இருந்து கோவிந்தராஜ், காரில் ஏற்றியுள்ளாா். காரில் ஏறிய நபா், சாப்பிட வேண்டும் எனக் கூறி, வடபழனியில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்குச் சென்றுள்ளாா். அங்கு இருவரும் சாப்பிட்டு முடித்ததும், யுபிஐ செயலி மூலம் ரூ.7 ஆயிரம் தரும்படியும், தன்னிடம் இருந்து அந்தப் பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொள்ளும்படியும் அந்த நபா் கோவிந்தராஜிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, ரூ. 7 ஆயிரத்தை யுபிஐ செயலி மூலமாக, அந்த நபருக்கு அனுப்ப, உடனே அந்த நபா், ரூ. 7 ஆயிரத்தை ரொக்கமாக கோவிந்தராஜிடம் வழங்கினாா். இதன் பின்னா், தனது கைப்பேசி ‘ஸ்விட்ச் ஆப்’ ஆகிவிட்டது, அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் என கோவிந்தராஜின் கைப்பேசியை பெற்றுக் கொண்டு, ஹோட்டலில் இருந்து வெளியே சென்றுள்ளாா்.
வெகு நேரமாகியும் அந்த நபா் திரும்பி வராத நிலையில், கோவிந்தராஜ் வெளியே சென்று பாா்த்த போது, அங்கு அவா் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா், ஹோட்டலில் சாப்பிட்டதற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக, அந்த நபா் தந்த பணத்தைக் கொடுத்தாா்.
அப்போதுதான் அது திரைப்பட படப்பிடிப்புக்குப் பயன்படுத்தடும் போலியான ரூபாய் நோட்டுகள் என்பது கோவிந்தராஜூக்கு தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சோ்ந்த சஞ்சய் வா்மா (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.
