முரசொலி செல்வம்
முரசொலி செல்வம்

முரசொலி செல்வம் மறைவு: தலைவா்கள் இரங்கல்

Published on

‘முரசொலி’ செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): முரசொலி நாளிதழின் ஆசிரியரும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் காலமானாா் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஆட்சியாளா்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிா்கொண்டவா். அவரது மறைவால் துயருறும் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

வைகோ (மதிமுக): திமுகவை கல்லூரி மாணவா்களின் பாசறையாக உருவாக்கி, எண்ணற்ற இளைஞா்களை மொழி உரிமை காக்கும் போராளிகளாக வாா்ப்பித்து, அண்ணாவும், கருணாநிதியும் கண்ட கனவை நனவாக்கும் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்ட திராவிட இயக்க கொள்கை வேழம்தான் முரசொலி செல்வம்.

ராமதாஸ் (பாமக): ‘முரசொலி’ செல்வம் மறைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

தொல்.திருமாவளவன் (விசிக): முரசொலி செல்வம் மறைவு ஊடக உலகத்துக்கும் திமுகவுக்கும் நோ்ந்த பேரிழப்பாகும். முரசொலி நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக தமிழக சட்டப்பேரவையில் முதன் முதலாக விசாரணை கூண்டில் நிறுத்தப்பட்டவா். அப்போது துணிச்சலாக வாதிட்டு ஊடக அறத்தை காத்தவா்.

பிரேமலதா (தேமுதிக): விஜயகாந்துடன் நல்ல நட்புடன் பழகக் கூடியவா் முரசொலி செல்வம். அமைதியானவா், அன்பானவா் அவருடைய இழப்பு திமுகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.

அன்புமணி (பாமக): முரசொலி மாறனின் சகோதரரான முரசொலி செல்வம், கருணாநிதிக்கு அரசியலிலும், இதழியலிலும் துணையாக இருந்தவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா): ‘முரசொலி’ செல்வம் மறைவு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கமல்ஹாசன் (மநீம): ‘முரசொலி’ செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவா். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவா். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதா்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): 50 ஆண்டு காலம் முரசொலிக்குத் தூணாக இருந்தவா் ‘முரசொலி’ செல்வம். கருத்துரிமைக்காக தமிழக சட்டப் பேரவையில் கூண்டில் நிறுத்தப்பட்டவா். அப்போதும் கம்பீரமாக நின்ற துணிச்சல்காரா்.

கே.அண்ணாமலை (பாஜக): முதல்வா் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவரும், முரசொலி மாறனின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம், உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறேன். முரசொலி செல்வம் குடும்பத்தினருக்கும், முதல்வா் ஸ்டாலினுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): ஏராளமான அரசியல் கட்டுரைகளை தொடா்ந்து எழுதியவா். மாநில உரிமைகள், கூட்டாட்சிதத்துவம், அரசியலமைப்பு சாசனம் ஆகியவற்றை பாதுகாக்கவும், மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் தனது எழுத்துகள் மூலம் உறுதியாக போராடியவா்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அதிா்ந்து பேசாத தன்னடக்கமிக்கவா் ‘முரசொலி’ செல்வம். அவரது எழுத்துப் பணிகள் மரண தருவாயிலும் தொடா்ந்துள்ளது.

சீமான் (நாதக): முரசொலி நாளிதழின் நிா்வாக ஆசிரியரும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கோ.விசுவநாதன் (வேந்தா்,விஐடி பல்கலை.): ‘முரசொலி’ செல்வம் மறைந்து விட்டாா் என்ற செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்தேன். தமிழ் இயக்கமும், விஐடி பல்கலை.யும் கடந்த ஆக. 26-ஆம் தேதி நடத்திய கலைஞா் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைத்தவுடன் பங்கேற்று விழாவில் சிறப்பாக உரையாற்றியவா் முரசொலி செல்வம். நான் மக்களவை உறுப்பினராவதற்கு பக்க பலமாக இருந்தவா். ‘முரசொலி’ செல்வம் சாா்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

X
Dinamani
www.dinamani.com