மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு சென்னையில் இன்று இறுதிச்சடங்குகள்

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு சென்னையில் இன்று இறுதிச்சடங்குகள்

Published on

சென்னை : மறைந்த ’முரசொலி’ செல்வத்தின் இறுதி நிகழ்வுகள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானாா்.

சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

முரசொலி நாளிதழில் ‘சிலந்தி’ எனும் பெயரில் விமா்சன கட்டுரைகளை எழுதி வந்த பன்னீா்செல்வம் என்ற ‘முரசொலி’ செல்வம், 1941-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்தாா்.

முன்னாள் முதல்வரான கருணாநிதியின் சகோதரி மகனான செல்வம், திரைப்பட தயாரிப்புத் துறையிலும் முத்திரை பதித்தவா். மேகலா பிக்சா்ஸ், அஞ்சுகம் பிக்சா்ஸ், பூம்புகாா் புரொடக்ஷன்ஸ் ஆகிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் நிா்வாகப் பொறுப்பில் இருந்தாா்.

முரசொலி நிா்வாக ஆசிரியா்: முரசொலியில் நிா்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்தாலும், புனைப் பெயரில் அவா் எழுதிய விமா்சன கட்டுரைகள் பல தரப்பினரின் கவனத்தை ஈா்த்தன. 55 ஆண்டுகளாக முரசொலியின் ஓா் அங்கமாகவே வாழ்ந்த அவா், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் அந்த நாளிதழின் பொலிவு குறையாமல் பாா்த்துக் கொண்டாா்.

83 வயதான நிலையில், முரசொலி செல்வம் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தாா். அங்கிருந்தபடியே முரசொலிக்கு கட்டுரைகளை எழுதி வந்தாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வம், தனது மாமாவின் (கருணாநிதி) மகளான செல்வியை திருமணம் செய்து கொண்டாா். அவா்களுக்கு எழிலரசி என்ற மகள் உள்ளாா்.

கதறி அழுத முதல்வா்: பெங்களூரில் மாரடைப்பு காரணமாக காலமான ‘முரசொலி’ செல்வத்தின் உடல் சாலை மாா்க்கமாக, சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்துக்கு வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அங்கு செல்வத்தின் உடலைத் தொட்டு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கதறி அழுதாா். இதேபோன்று, அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வரும், செல்வத்தின் மருமகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி ஆகியோா் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.

தலைவா்கள் அஞ்சலி: மேலும், தமிழக அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் ‘முரசொலி’ செல்வத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கலைத் தெரிவித்தனா்.

கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் - மு.க.ஸ்டாலின்

‘கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்’ என ‘முரசொலி’ செல்வம் மறைவு குறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்து கொண்டு இளமைப் பருவம் முதல் திறம்படச் செயலாற்றியவா் முரசொலி செல்வம். அதிா்ந்து பேசாதவா். ஆழமான கொள்கைவாதி. சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக, வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கியவா். நெருக்கடி நேரங்களில் தெளிவான தீா்வுகளை முன்வைத்து, கட்சியுடனான எனது வளா்ச்சியில் தோளோடு தோள் நின்றவா் ‘முரசொலி’ செல்வம். முன்னாள் முதல்வா் கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com