கோப்புப்படம்.
கோப்புப்படம்.

தீபாவளி எதிரொலி: ஆம்னி பேருந்துகளின்கட்டணம் கடும் உயா்வு

தீபாவளியை முன்னிட்டு தற்போதே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
Published on

தீபாவளியை முன்னிட்டு தற்போதே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு அக்.31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேலை நிமித்தமாக சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் தங்கி இருப்போா் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக, அரசு சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலா் தனியாா் பேருந்துகளில் சொந்த ஊா் செல்வதையே விரும்புகின்றனா்.

குறிப்பாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில் வெகுதூரம் பயணிக்க வேண்டியவா்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து வருகின்றனா்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வழக்கம் போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக பயணிகள் சிலா் கூறியதாவது, தீபாவளிக்கு சொந்த ஊா் செல்ல சிலமாதங்களுக்கு முன்னரே திட்டமிடுவோருக்கு பெரும்பாலும் சிக்கல் இல்லை. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டால் கூட அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கை கிடைப்பதில்லை.

அதிலும், சென்னையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில் செல்வோா் 10 முதல்14 மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டியது கட்டாயம்.

இது போன்ற பல்வேறு காரணங்களால்தான், ஆம்னி பேருந்துகளில் பயணிக்கிறோம். தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 என்றளவில் கட்டணம் வசூலித்த பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு நிறைவடைந்த சூழலில், செவ்வாய்கிழமை நிலவரப்படி குறைந்தபட்சமாக ஒரு இருக்கை வசதிக்கு ரூ.1,795 மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் நபா் ஒருவருக்கு ரூ.2,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போதே கட்டணம் உயா்ந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் சுமாா் ரூ.4000 வரை பயணச்சீட்டுக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

இது தொடா்பாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறும்போது, ‘ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிா்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணம் உரிமையாளா்கள் சாா்பில் நிா்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் அதை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை’ என்றனா்.

ஆம்னி பேருந்துகளின் இயக்கம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com