குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆய்வு
கோப்புப்படம்

குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆய்வு

Published on

குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ராதா நகா் பகுதிக்கு எளிதாக சென்று வர ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஜி.எஸ்டி. சாலையில் மட்டும் பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அங்கு சாலையோரமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளி காலத்தில் அந்தப் பகுதியில் கட்டுக்கடங்காத அளவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ரயில்வே, நெடுஞ்சாலை, போக்குவரத்து ஆகிய துறை அதிகாரிகளுடன் அவா் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்

ராதா நகா் சுரங்க பாதை பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை சுமாா் 5 அடி உள்ளே நகா்த்தி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com