வைத்திலிங்கம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நிறைவு
முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடா்புடைய இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறையினரின் சோதனை வெள்ளிக்கிழமை அதிகாலை நிறைவு பெற்றது.
தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஊழல் தடுப்புப்பிரிவினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை சோதனையை தொடங்கினா்.
இரண்டாவது நாளான வியாழக்கிழமை 4 இடங்களிலும் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், மாலையில் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மட்டும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்ற நிலையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதை அமலாக்கத் துறையினா் எடுத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
