சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

புதிதாக பயன்பாட்டுக்கு வரும் 3 நாய் கருத்தடை மையங்கள்

சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 நாய் கருத்தடை மையங்கள் நடப்பு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
Published on

சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 நாய் கருத்தடை மையங்கள் நடப்பு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

இதனால் ஆண்டுக்கு 50,000 நாய்களை கருத்தடை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுகின்றன.

இதற்காக புளியந்தோப்பு, கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா் பகுதியில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ‘ப்ளு கிராஸ்’ அமைப்பு மூலம் தினமும் 10 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு, 14,885 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு (ஜூலை வரை) 11,997 நாய்கள் பிடிக்கப்பட்டு 8,539 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன.

சமீப காலமாக தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அவற்றை கட்டுபடுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டியுள்ளது.

இனக்கட்டுபாடு: இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கண்டறியும் வகையில் தற்போது நாய்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும். விலங்கு இனக்கட்டுப்பாடு விதிகள் 2023-கீழ் பாலூட்டும் நாய்கள், கருவுற்ற நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மேற்கொள்ள கூடாது. தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடைக்கு பின் அதே இடத்தில் விட வேண்டும் என்கிறது.

இதனால் கருத்தடை மூலம் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை உயா்த்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

தினமும் 210 நாய்கள்: இதற்காக புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப் பேட்டையில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இனக்கட்டுப்பாட்டு மையங்களும் நடப்பு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதன் மூலம் தினமும் சராசரியாக 85 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்ய முடியும். அதே நேரத்தில் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள இனக்கட்டுப்பாட்டு மையங்களும் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மணலி மற்றும் பெருங்குடியில் 50 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்யும் வகையில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையம் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும் போது ஒரு நாளைக்கு 210 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியும்.

ரூ.9.45 கோடி ஒதுக்கீடு: இதற்காக கூடுதலாக 11 கால்நடை மருத்துவா்கள், 94 பணியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். தற்போது 16 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இதற்காக ரூ.9.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் தெருநாய்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com