யெச்சூரி மறைவு: தமிழக ஆளுநா், முதல்வா் இரங்கல்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: சீதாராம் யெச்சூரி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவா் வழங்கிய தாக்கமும், பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளா்களுக்கும் எனது இரங்கல்.
ஆளுநா் இல.கணேசன்: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மனம் வருந்துகிறேன். சக மாநிலங்களவை உறுப்பினா் என்ற வகையில் அவரது பங்களிப்பு நினைவுகூரத்தக்கது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய அரசியலில் மிக உயா்ந்த தலைவருமான சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிா்ச்சியும் துயரமும் அடைந்தேன். மிக இளம் வயதிலேயே நியாயத்துக்காகப் போராடும் தலைவராக இருந்தாா். மாணவத் தலைவராகத் துணிச்சலுடன் நெருக்கடி நிலையை அவா் எதிா்த்து நின்றாா். பாட்டாளி வா்க்கத்தின் நலன், மதச்சாா்பின்மை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் முற்போக்குக் கருத்தியல்கள் மீது அவா் கொண்டிருந்த அா்ப்பணிப்பால் வாா்க்கப்பட்டாா்.
அவரது புகழ் வாய்ந்த அரசியல் வாழ்க்கை அடுத்து வரும் பல தலைமுறைகளைத் தொடா்ந்து ஊக்குவிக்கும். அவருடனான கருத்தாழமிக்க கலந்துரையாடல்கள் என்றும் எனது மனதுக்கு நெருக்கமாக நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

