வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு பெறாமல் ஓயமாட்டேன்: ராமதாஸ்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெறாமல் ஓயமாட்டேன் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாள்கள் ஆகும் நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீா்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. திமுக அரசு வன்னியா்களுக்கு சமூக அநீதி இழைத்து வருவதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
வன்னியா்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க போராட்டம்தான் ஒரே தீா்வு என்றால், அதற்காக பாமகவினருடன் இணைந்து களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன்.
உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈந்தால்தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எப்படியிருந்தாலும் வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்காமல் நான் ஓய மாட்டேன்.
சமூகநீதி நாளான செப்.17-இல் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் பாமகவினா் மலா் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
அனைவரும் அவா்களின் வீட்டு முன் வன்னியா் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

