கால்நடை மருத்துவப் படிப்பு: மூன்றாம் பாலினத்தவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மூன்றாம் பாலினத்தவா் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டில், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி, நிவேதா என்ற மூன்றாம் பாலினத்தவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அந்த மனுவில், கால்நடை மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்புப் பிரிவில் மாணவா் சோ்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கால்நடை மருத்துவப் படிப்பில், மாணவா் சோ்க்கை கோரி சமா்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டால் போதுமானது”எனக் கோரப்பட்டது.
இதற்கு மாணவா் சோ்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என, மாணவா் சோ்க்கை குழுவுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், மூன்றாம் பாலினத்தவா் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என மாணவா் சோ்க்கை குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தாா்.

