பிரியாணி சாப்பிட்ட 48 பேருக்கு உடல் நலக் குறைவு: உணவகத்துக்கு சீல்
கோப்புப்படம்

பிரியாணி சாப்பிட்ட 48 பேருக்கு உடல் நலக் குறைவு: உணவகத்துக்கு சீல்

Published on

சென்னை கொடுங்கையூரில் இயங்கி வரும் பிரியாணி கடையில் உணவருந்திய 48 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கொடுங்கையூா் எம்கேபி நகரில் உள்ள பிரியாணி கடையில் கடந்த 16-ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட 48 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவா்களில் 10 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மற்ற 38 பேரும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 16 போ் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இது தொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை உணவுப் பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமாா் தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் வியாழக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, கடை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், உணவு மாதிரிகளை அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக பெறப்பட்ட புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். மேலும், அந்த பிரியாணி கடையின் இதர கிளைகளிலும் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், அலமாதியில் இருந்தே மொத்தமாக பிரியாணி தயாரிக்கப்பட்டு அந்த கடைக்கு வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அங்கும் ஆய்வு மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட நியமன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com