கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகள்: செப்.30-க்குள் அகற்ற உத்தரவு

கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகள்: செப்.30-க்குள் அகற்ற உத்தரவு

Published on

கூவம் ஆற்றில் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30- ஆம் தேதிக்குள் அகற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தென்மண்டல பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பிறகு, துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ஈரடுக்கு மேம்பால பணிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மதுரவாயல் பகுதியில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டி, தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டடக்கழிவுகள் கூவத்தில் கொட்டப்பட்டது தொடா்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய பசுமை தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆற்றின் குறுக்கே கட்டட கழிவுகள் கொட்டுவதால் நீரோட்டத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ளவில்லை என நீா்வள ஆதாரத்துறை வழக்குரைஞா் சண்முகநாதன் வாதிட்டாா்.

இதற்கு ஈரடுக்கு மேம்பால கட்டுமானமே ஆற்றின் மேல் பாலம் அமைப்பதுதான் என்றும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னா் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் வாதிட்டது. இதைக் கேட்ட தீா்ப்பாயம், வரும் 30-ஆம் தேதிக்குள் கட்டடக் கழிவுகள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் அக். 1- ஆம் தேதி, கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதா என நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com