செப்.23-இல் கடற்கரை - தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி செல்லும் இரவுநேர மின்சார ரயில்கள் செப்.23-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளன.
தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் செப்.23-ஆம் தேதி இரவு 10.40 முதல் செப்.24 காலை 4.30 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், செப்.23-இல் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், இரவு 8.05 மணிக்கு திருவள்ளூா் செல்லும் ரயிலும், இரவு 10.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக அதேநாளில் திருவள்ளூரிலிருந்து இரவு 9.35-க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 10.45-க்கும் கடற்கரை வரும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.
மேலும், செப்.24-இல் சென்னை கடற்கரையிலிருந்து காலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: கடற்கரையிலிருந்து செப்.23-ஆம் தேதி இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கடற்கரைக்கு பதிலாக எழும்பூரிலிருந்து இயக்கப்படும். அதே தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து இரவு 9.10, 10.10, 11 மணிக்கும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கும் கடற்கரை வரும் ரயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும். அதேபோல், கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு கடற்கரை வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மேலும், கடற்கரையிலிருந்து செப்.24-ஆம் தேதி அதிகாலை 3.50-க்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் கடற்கரைக்கு பதிலாக எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

