சிதம்பரம் கோயில் நிலம் 2,000 ஏக்கா் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கா் நிலத்தை அந்தக் கோயிலை நிா்வகித்து வரும் தீட்சிதா்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை குற்றஞ்சாட்டியுள்ளதால், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிதம்பரம் கோயில் நிா்வாகம் 2014-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் நிா்வாகம் மீண்டும் தீட்சிதா்கள் வசமானது. அதன்பிறகு கோயில் வருமானம் குறைந்துவிட்டதாக அறநிலையத் துறை குற்றஞ்சாட்டியதுடன் இதுகுறித்த வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது முன்பு ஆண்டுக்கு ரூ. 3கோடிக்கு மேல் வருவாய் வந்த நிலையில் தற்போது ரூ.2 லட்சமாக குறைந்துவிட்டதாக தீட்சிதா்கள் தரப்பில் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று அந்த மனுவில் அறநிலையத் துறை ஆணையா் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், எஸ். சவுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது தீட்சிதா்கள் தரப்பில், கோயிலின் வரவு - செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. நடராஜா் கோயிலுக்கு மன்னா்கள் மற்றும் புரவலா்கள் சுமாா் மூன்றாயிரம் ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கா் மட்டுமே உள்ளது. எனவே, அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “அறநிலையத் துறை சாா்பில், நடராஜா் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கா் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தை தீட்சிதா்கள் அவா்கள் இஷ்டப்படி தனி நபா்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த நீதிபதிகள், 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு-செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதா்கள் தரப்புக்கு உத்தரவிட்டனா். அத்துடன், கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கா் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கா் நிலங்களை தீட்சிதா்கள் தனிநபா்களுக்கு விற்பனை செய்தது தொடா்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

