ஆளுநா் மாளிகையில் அக். 3 முதல் கொலு கண்காட்சி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு!
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அக். 3 முதல் அக்.12-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நவராத்திரி கொலு கண்காட்சி கொண்டாடத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அக்.3 முதல் அக்.12-ஆம் தேதி வரை நவராத்திரி கொலு கண்காட்சி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியை அக்.3-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என். ரவி தொடங்கி வைக்கிறாா். கொலு கண்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் வழிபாடு நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறுகிறது. தொடா்ந்து நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா்கள் கலந்து கொள்ளலாம்.
ஆா்வமுள்ளவா்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களில் தங்களது பெயா், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், வருகைக்கான தேதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 150 பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்களுக்கு அவா்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும். பாா்வையாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு குறைந்தது 30 நிமிஷங்களுக்கு முன்னதாக, ஆளுநா் மாளிகை இரண்டாம் நுழைவு வாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றை உடன் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

