கிடப்பில் கொலீஜியத்தின் மறுபரிந்துரைகள் விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நிதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் மறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது தொடா்பான விவரங்கள், அதற்கான காரணங்களைச் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பும் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவது தொடா்கதையாகி வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு கால வரம்பு நிா்ணயிக்கக் கோரி ஹா்ஷ் விபோா் சிங்கல் என்ற வழக்குரைஞா் தொடா்ந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான, நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், உச்சநீதிமன்றம் கொலீஜியம் தரப்பில் மறுபரிந்துரை செய்யப்பட்டு நிலுவையில் வைத்துள்ள பெயா்களின் பட்டியல், அந்தப் பரிந்துரைகளை நிலுவையில் வைத்துள்ளதற்கான காரணங்கள், பரிசீலனை நிலை உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
மேலும், ‘சில நியமனங்கள் தொடா்பாக மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அந்த நியமனங்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
அப்போது, இந்த விவரங்களைச் சமா்ப்பிக்க ஏதுவாக விசாரணையை ஒத்திவைக்க மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி வலியுறுத்தினாா்.
அதற்கு, மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தாா். நீதிபதிகள் நியமனங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், விசாரணையை ஒத்திவைக்க அட்டா்னி ஜெனரல் வேண்டுகோள் விடுப்பது ஏன் என்று தெரியவில்லை’ என்றாா்.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக தனியாக மனு தாக்கல் செய்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘கொலீஜியம் பரிந்துரைகளுக்கு 6 மாதங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனில், அந்தப் பரிந்துரையில் உள்ள நபா்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதாகக் கருதப்படும்’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு அரசமைப்புச் சட்ட மதிப்பு உள்ளது. எனவே, இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு கிடப்பில் போட, உச்சநீதிமன்ற கொலீஜியம் தேடல் குழு போன்ற அமைப்பு அல்ல’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
முன்னதாக, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எம்.எஸ்.ராமசந்திர ராவை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமா்ப்பித்த பரிந்துரையையும் மத்திய அரசு கிடப்பில் போட்டுவைத்துள்ளதற்கு எதிராக ஜாா்க்கண்ட் அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதற்கான காரணம் தொடா்பான சில விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

