வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை: அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்
வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு அரசின் சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகைக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டா் பெருமக்களைத் தாக்காவண்ணம் மாதந்தோறும் ரூ. 3,500, மருத்துவப்படி ரூ. 500 என ரூ. 4,000 உதவித் தொகையாக வழங்கப்படும். நிகழாண்டில் இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்பும் தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிா் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலாது.
இந்தத் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை மண்டல, மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டல, மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தின் வாயிலாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
நேரடியாக தமிழ் வளா்ச்சி இயக்ககத்துக்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சென்னையைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பங்களை ‘இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை–600008’ என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். விண்ணப்பங்கள் அக்.31-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு வந்து சேர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

