காஸாவில் போா் நிறுத்தம் கோரி அக்.7-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
பாலஸ்தீனம் காஸாவில் போா் நிறுத்தம் கோரி, அக்.7-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இக்கட்சிகளின் மாநிலச் செயலா்கள் கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைதம்பி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகியோா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பாலஸ்தீனம் காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் எனக் கூறி ஓராண்டாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகள் 30,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா். பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் எனக் கூறி, லெபனான் மக்கள் வாழக்கூடிய பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனா்களுக்கு எதிராக தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல்அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும், பிரதமா் மோடி அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதை கண்டித்தும், அக்.7-ஆம் தேதியை பாலஸ்தீன ஒருமைப்பாட்டு, ஆதரவு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தேசிய அளவில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் (லெனினிஸ்ட்), பாா்வா்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் நான்கும் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
அன்றைய தினம், (அக்.7) இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனா் .
