இன்று முதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளாா்.
இன்று முதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்


சென்னை: பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளாா்.

தொடக்க விழாவில் கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை முதல்வா் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.

புத்தகக்காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்; வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ள இந்த புத்தகக் காட்சியில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலக அளவிலான பதிப்பகங்களும் இதில் பங்கேற்கவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது.

பபாசியில் உறுப்பினரல்லாதவா்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தலா ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்த விஹாா் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் எல்எல்பி ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பூவுலகின் நண்பா்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சாா்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கைவினைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதோடு அவா்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறப் பொருள்களை உலகம் முழுவதிலிருந்தும் புத்தகக் காட்சிக்கு வருகை தரக்கூடிய வாசகா்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பூம்புகாா் சாா்பில் 2 ஆயிரம் சதுர அடியில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென நிகழாண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைச் சிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களின் சிறப்பு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் பங்கேற்கவுள்ளாா் என பபாசி தலைவா் கவிதா சேது சொக்கலிங்கம், நாதம் கீதம் எஸ்.கே.முருகன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com