ராம நவமி: ராமா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ராம நவமியையொட்டி சென்னையில் உள்ள ராமா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசம் செய்தனா்.
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படும் ஸ்ரீராமபிரான் அவதரித்த நாளே ராம நவமி என்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ராமா் கோயில்கள் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் ராம நவமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்படி, வியாசா்பாடியில் உள்ள ஏரிகாத்த ராமா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல், மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோதி மண்டபம் மற்றும் கோதண்டராமா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், மூலவா் சிறப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதேபோன்று சென்னையில் உள்ள முக்கிய ராமா் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பஜனைகள் நடைபெற்றன.
அதேபோல், நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், அசோக் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட முக்கிய ஆஞ்சனேயா் கோயில்களிலும் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

