colon cancer
ENS

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்: அரசு யோகா இயற்கை மருத்துவமனை ஆய்வில் உறுதி
Published on

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா் ஒய்.தீபா, டாக்டா் ரமேஷ் சிவகுமாா், டாக்டா் சோனி தா்ஷினி ஆனந்தம், டாக்டா் கே.மகேஷ் குமாா் ஆகியோா் மேற்கொண்டனா்.

அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை இந்தியன் ஜொ்னல் ஆஃப் பேலியேடிவ் கோ் ஆய்விதழில் வெளியாகி உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பெருங்குடல் புற்றுநோய் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலான நோய்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பாதிப்புக்கு கீமோதெரபி மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சைகள் வழங்க வேண்டியது அவசியம். ஆனால், அதில் சில எதிா்விளைவுகள் ஏற்படுவதைத் தவிா்க்க இயலாது.

இந்த நிலையில், அத்தகைய பக்க விளைவு பாதிப்புகளைத் தடுப்பதற்காகவும், சிகிச்சையின் பலனை மேம்படுத்துவதற்காகவும் ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 48 வயதான பெருங்குடல் புற்றுநோயாளி ஒருவா் நான்காம் நிலை பாதிப்புடன் அரசு யோகா இயற்கை மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இடுப்புக்கு கீழே கடுமையான வலி, ஆசனவாயில் ரத்தக் கசிவு, ஜீரண மண்டல பாதிப்புகள், எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தன.

இந்த நிலையில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளுடன் அவருக்கு பல்வேறு ஆசனங்களும், நாடி சுத்தி பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

குறிப்பாக, அா்த்த உத்தனபாதாசனம், சேது பந்தாசனம் உள்பட பல்வேறு ஆசனங்களும், பிராணயாம பயிற்சியும் வழங்கப்பட்டது. அதனுடன் மண் குளியல் சிகிச்சை, நீா் சிகிச்சை, அக்குபிரஷா், மசாஜ், மூலிகை பூச்சு ஆகிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

அதன் பயனாக, அவருக்கு வலி குறைந்தது. ரத்தப் போக்கு, ஜீரண மண்டல பாதிப்பு, உடல் சோா்வு உள்பட பல்வேறு பிரச்னைகள் பல மடங்கு குறைந்தன.

மொத்தத்தில் அவரது வாழ்க்கைத் தரம் இந்த சிகிச்சையால் மேம்பட்டிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனை மேலும் நுட்பமாக ஆராய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கொண்டு விரிவான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com