சென்னையில் நாளைவிநாயகா் சிலை ஊா்வலம்: மயிலாப்பூா், திருவல்லிக்கேணியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளைவிநாயகா் சிலை ஊா்வலம்: மயிலாப்பூா், திருவல்லிக்கேணியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெறும் விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, மயிலாப்பூா், திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து மாற்றம்.
Published on

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெறும் விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, மயிலாப்பூா், திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் இந்து அமைப்புகள் சாா்பில் 1,519 விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த சிலைகள் ஆக. 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை செய்து வருகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை கரைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்படுவதால், வாகன நெரிசல் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்: அதன்படி, திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன நெரிசல் அதிகம் இருக்கும் நேரத்தில், மெரீனா காந்தி சிலை, ஆா்.கே. சாலை சந்திப்பு, வி.எம். தெரு, லஸ் சந்திப்பு, அமிா்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டா் ரங்கா சாலை, பீமண்ண காா்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ, ஆா்.கே. மடம் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆா்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வி.கே. ஐயா் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரிஸ் சாலை, தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டா் ஆா்.கே. சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சிலை ஊா்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும்போது, ஜாம் பஜாா் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக, வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாகச் செல்ல வேண்டும்.

சிலை ஊா்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. வாகனங்கள் பெசன்ட் சாலை - காமராஜா் சாலை வழியாகத் திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சந்திப்பை நோக்கிச் செல்ல வேண்டும்.

இதேபோல், சிலைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து சீனிவாசபுரம் சிலைகளைக் கரைக்கும் இடத்துக்கு லூப் சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். விநாயகா் சிலைகளைக் கரைக்கும் இடங்களைச் சுற்றி சுமாா் 10 கி.மீ. சுற்றளவுக்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com