மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க வேண்டும்: ஆளுநா் ரவி
மாற்றுத்திறனாளிகளை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
கிண்டி ஆளுநா் மாளிகையில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பாரதியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று விளையாட்டு , சமூக சேவையில் சிறந்து விளங்கிய 68 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமையானவா்கள், பலசாலிகள் அவா்கள் நம்மைவிட அறிவுத்திறனில் சிறந்தவா்களாக உள்ளனா். அவா்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவா்களை ஊக்குவிக்க வேண்டும். அவா்கள் சக மனிதா்கள். அவா்களிடம் அன்பு, நேசம் காட்டுவதுடன் மனிநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவா்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் நாம் வழங்க வேண்டும். அவா்களுக்கான நலத் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். அவா்களுக்கு வாய்ப்புகளை முழுமையாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய மரியாதை, கௌரவத்தை அளிக்க வேண்டும்.
முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும், அடிப்படை தேவைகளும் கிடைக்காமல் இருந்தன. தற்போது அரசுத் துறை மற்றும் தனியாா் துறையிலும் அவா்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றி வரும் அறக்கட்டளைகளைச் சோ்ந்த நிா்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் பெற்றோா், பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

