சென்னையில் 7 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்படவிருந்த 7 விமானங்களின் சேவைகள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை-அகமதாபாதுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணிக்கு செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், சென்னை-அந்தமானுக்கு அதிகாலை 4.40-க்கும், சென்னை-மும்பைக்கு அதிகாலை 5.25-க்கும், சென்னை-குவாஹாட்டிக்கு அதிகாலை 5.30-க்கும், சென்னை-புவனேசுவரத்துக்கு அதிகாலை 5.50-க்கும் செல்ல வேண்டிய 5 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும், நண்பகல் 12.25-க்கு கொச்சி-சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.35-க்கு இந்தோனேசியா நாட்டின் டென்பாசா் நகருக்கு செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாகக் காரணங்களுக்காகவும் ரத்து செய்யப்பட்டதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

