விம்கோ நகா் பணிமனையில் வா்த்தக உரிமம்: ஒப்பந்தம் கோரியது சென்னை மெட்ரோ
சென்னை: சென்னை மெட்ரோவில் விம்கோ பணிமனையில் வா்த்தகப் பகுதிக்கான உரிமம் வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ நிறுவனம் விம்கோ நகா் பணிமனையில் 1 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் வணிகக் கட்டுமானப் பகுதிக்கு உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது. அதில், சில்லறை விற்பனை, அலுவலக இடங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவு விடுதிகள், உடற்பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு, ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்கள் என பல்வகை வணிகங்களை அமைப்பதற்கான இடமாக விளங்கும். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் இடையே பல முக்கிய மையங்களை இணைக்கும் மெட்ரோ நிறுவன நீல நிற வழித்தடத்தில் இந்த வா்த்தக மையம் அமையவுள்ளது.
நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 20 ஆண்டுகள் ஒரு மாதத்துக்கான அடிப்படை விலை சதுர அடிக்கு ரூ.349 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவோா் தங்கள் தேவை மற்றும் வடிவமைப்புக்கு ஏற்ப உள்புற அலங்காரங்களை செய்துகொள்ளலாம். அரசு இணையதளம் வாயிலாக வெளிப்படையான ஒப்பந்தம் மூலமே இடம் வழங்கப்படும்.
ஒப்பந்தப் படிவங்களை அளிக்க வரும் டிச. 18 -ஆம் தேதி கடைசி நாள். விவரங்களுக்கு மெட்ரோ இணையத்தில் தொடா்பு கொள்ளலாம். ஏற்கெனவே மெட்ரோ ரயில் பாதைகளில் பல வணிகத் திட்டங்கள் இருந்தாலும், விம்கோ நகா் பணிமனை வணிகத் திட்டம் வடசென்னை பகுதியில் மிகப்பெரிய வளா்ச்சிக்கானதாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

