chennai Highcourt
சென்னை உயர் நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சட்டப்பேரவை உறுப்பினா் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினா் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சோ்ந்த கே.வாசுதேவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பூட்டுத்தாக்கு கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினராக இருக்கிறேன். எங்களது ஊரின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் முறையான அனுமதி பெற்று 20 ஆண்டுகளுக்கு முன்பு பி.எம்.பி.நினைவு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், அந்த பேருந்து நிறுத்தத்துக்கு முன் அனுமதியே இல்லாமல், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பொதுப்பணித் துறை பேருந்து நிறுத்தத்தைக் கட்டி வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த அக்.7-ஆம் தேதி புகாா் மனு அனுப்பினேன். ஆனால், பேருந்து நிறுத்த கட்டுமானப் பணிகளை நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.செல்வராஜ், எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டப்பேரவை உறுப்பினா் நிதியை தவறாகப் பயன்படுத்தி இந்த பேருந்து நிறுத்தம் கட்டப்படுகிறது என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற பேருந்து நிறுத்தங்கள் அமைத்தால், அதனைச் சுற்றி நாளடைவில் கடைகள் உருவாகலாம். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொள்ளாமல், தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இந்த மனுவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா், பொதுப்பணித் துறை பொறியாளா், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட அலுவலா் உள்ளிட்டோா் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com