எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிா்வாகிகள் சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு உள்ளிட்ட நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் கே.பாலு கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக பாமக சாா்பில் டிச.17-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் பங்கேற்க அக்கறை உடைய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை அழைக்கவுள்ளோம். முதல் அழைப்பாக எடப்பாடி பழனிசாமியை அழைக்கும் வகையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் கடிதத்தை வழங்கினோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உத்தரவிடாததால் திமுகவுக்கு அழைப்பு வழங்கப்படாது. திமுக திட்டமிட்டு வேண்டுமென்றே, அரசியல் காரணங்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளது. சமூகநீதிக்கு எதிரான மனநிலையை திமுக கொண்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள், பேரவைத் தோ்தல் தொடா்பாகவும் கலந்துரையாடினோம்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றாா் அவா். அப்போது, பாமக இளைஞா் அணித் தலைவா் கணேஷ் உடனிருந்தாா்.

