high court file photo
உயர் நீதிமன்றம்file photo

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை டிச.11-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை டிச.11-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை புகா் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ஜெ.பிரஷ்நேவ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

பள்ளிக்கரணை மட்டுமின்றி அந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்தவிதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என சிஎம்டிஏ-வுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டது எனத் தெரிவித்தாா்.

அப்போது தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பொருத்தவரை, தற்போதைய எல்லையை வரையறுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அதுதொடா்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், அதுவரை இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து, விசாரணையை டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com