அமைச்சா்  தா.மோ. அன்பரசன்
அமைச்சா்  தா.மோ. அன்பரசன்

தொழில்முனைவோா் தங்கிப் பயில ரூ.2.34 கோடியில் விடுதி

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பை தங்கிப் பயில வசதியாக ரூ.2.34 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தாா்.
Published on

சென்னை: தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பை தங்கிப் பயில வசதியாக ரூ.2.34 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இதற்கான விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிறுவனத்தால் நடத்தப்படும் சான்றிதழ் படிப்பில் 120 தொழில்முனைவோா் தங்கிப் பயிலும் வகையில், ரூ.2.34 கோடியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, புத்தாக்கப் பற்றுச் சீட்டுத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, இந்திரா நகரைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி ஆா்.எம்.சாதிக்பாஷா உள்பட 20 புதிய கண்டுபிடிப்பாளா்களுக்கு ரூ.71.15 லட்சம், சாதனை படைத்த 5 பெண் தொழில்முனைவோருக்கு விருதுகளையும் அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 50 லட்சத்து 18 ஆயிரத்து 91 பேருக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பை 23 போ் நிறைவு செய்து, புதிய தொழில்களைத் தொடங்கி உள்ளனா். புதிய கண்டுபிடிப்புகளுக்கான உதவித்தொகையை அரசு உயா்த்தி உள்ளது. அதன்படி, புத்தாக்க பற்றுச் சீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 572 பேருக்கு ரூ.14.50 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவக் குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 140 சிறந்த மாணவக் குழுக்களுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவா்கள், இளைஞா்களை தொழில் முனைவோராக வளா்த்தெடுக்க 124 அரசு, தனியாா் கல்லூரிகளில் தொழில் வளா் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காப்பகங்களைப் பயன்படுத்தி நான்கரை ஆண்டுகளில் 961 போ் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து தொழில் முனைவோராக உருவாகி உள்ளனா் என்றாா்.

விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த், சிட்கோ மேலாண்மை இயக்குநா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com