TASMAC
TASMACCenter-Center-Chennai

டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோத மது விற்பனை: திடீா் சோதனை நடத்த உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செம்பியத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையையொட்டிய மதுபானக் கூடத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இரவு நேரங்களில் கடை மூடிய பிறகு, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதில், டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள், மதுபானக்கூட உரிமம் பெற்றவா்கள், உயா் அதிகாரிகள் என அனைவரும் கூட்டுச் சோ்ந்து செயல்படுகின்றனா். இந்தத் தொகை அரசின் கஜானாவுக்குச் செல்வதில்லை.

டாஸ்மாக் பணியாளா்களும், மதுபானக்கூட உரிமையாளா்களும் இந்தத் தொகையை பங்கிட்டுக் கொள்கின்றனா். இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு பிரிவு கூடுதல் டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com