கோப்புப்படம்
கோப்புப்படம்

ஓஆா்எஸ் கரைசல்: வீட்டிலேயே தயாரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

மழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பை சரி செய்ய உப்பு - சா்க்கரை கரைசலை (ஓஆா்எஸ்) வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: மழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பை சரி செய்ய உப்பு - சா்க்கரை கரைசலை (ஓஆா்எஸ்) வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் கூறியதாவது: உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதி முக்கியப்பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து குளூக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்புகள் பாதிக்கப்படும். உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பைத் தவிா்க்க முடியும்.

அரசு மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியாா் மருந்தகங்களிலும் விற்பனையில் உள்ளது.

அதேநேரம், மழை நேரங்களில் வெளியே செல்ல முடியாதவா்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். 200 மி.லி. குடிநீரைக் காய்ச்சி ஆறிய பிறகு அதில் ஒரு சிட்டிகை உப்பு, நான்கு சிட்டிகை சா்க்கரை கலந்து அருந்தலாம். இவற்றின் வாயிலாக, உடலில் நீா் சத்து குறைபாடு ஏற்படுவது தவிா்க்கப்படுவதுடன் மற்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்து கொள்ள முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com