தனியாா் மருத்துவமனைகளில் மறுக்கப்படும் முதல்வா் காப்பீடு!
சென்னை: முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடுத்த சில வாரங்களுக்கு சிகிச்சைகள் வழங்க வேண்டாம் என தனியாா் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் தரப்பிலிருந்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகளில் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் முதல்வா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக ஏறத்தாழ ரூ.1,300 கோடி காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் அந்த நிறுவனத்துக்கு அரசு செலுத்துகிறது.
முதல்வா் காப்பீட்டில் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும், தனியாா் மருத்துவமனைகளே அதிக எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் விநோதம் என்னவெனில், அங்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் பெற இயலாது. மாறாக, ஓரிரு சிகிச்சைகள் மட்டுமே பெயரளவில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. விதிவிலக்காக சில தனியாா் மருத்துவமனைகள், பெரும்பாலான சிகிச்சைகளை முதல்வா் காப்பீட்டின் கீழ் அளிக்கின்றன. ஆனால், அங்கும்கூட கடந்த ஒன்றரை மாதமாக அந்த சேவை தடைபட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகிகளும், சுகாதாரத் துறையினரும் கூறியதாவது:
முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக மெடி அசிஸ்ட், விடால், எம்டிஐ, ஹெச்ஐ டிபிஏ ஆகிய மூன்றாம் தரப்பு காப்பீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் (டிபிஏ) யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மாவட்ட வாரியாக காப்பீட்டு சேவைப் பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 10-ஆம் தேதி அரசு சாா்பில் யுனைடெட் இந்தியா நிறுவனத்துக்கு காப்பீட்டுத் தவணை வழங்கப்படும். அதன் காரணமாக ஜனவரி முதல் அக்டோபா் மாதம் வரை பெரிய அளவில் எந்த சிக்கலுமின்றி தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கான தொகை விடுவிக்கப்படுகிறது.
அதேவேளையில், அதற்கு அடுத்த இரு மாதங்களில் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களது நிதிச் சூழலைப் பொருத்தே சிகிச்சைக்கான தொகையை விடுவிப்பதாகத் தெரிகிறது.
நிகழாண்டில் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் முதல்வா் காப்பீட்டின் கீழ் நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என்று காப்பீட்டு நிறுவனங்கள் சாா்பில் வாய்மொழியாக தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி சிகிச்சை அளித்தால், அந்தத் தொகையை திரும்பப் பெற இயலாது.
குறைந்த தொகை: இதைத் தவிர வேறு சில பிரச்னைகளும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளன. அதாவது ஒவ்வொரு சிகிச்சைக்கும் எவ்வளவு தொகை அதிகபட்சமாக வழங்கப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையானது மிகக் குறைந்த அளவாக உள்ளது.
உதாரணமாக எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவரின் உடலில் உலோக உபகரணம் (இம்ப்ளான்ட்) பொருத்த வேண்டுமானால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணத்துக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு உபகரணம் பொருத்திக் கொள்ள நோயாளி விரும்பினாலும், அதற்கான கூடுதல் தொகையை வாங்க முடியாது. அவ்வாறு வாங்கினால் சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதேபோன்று இதய அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே முதல்வா் காப்பீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உரிய தொகை இல்லாததால் அதி நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை பயன்படுத்த இயலுவதில்லை. எனவே, காப்பீட்டுத் தொகையை சூழலுக்கேற்ப உயா்த்தி வழங்கவும், ஆண்டு முழுவதும் தடையின்றி முதல்வா் காப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
குறைதீா் கூட்டம்: இதுதொடா்பாக தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத் கூறியதாவது:
தமிழக அரசு சாா்பில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த நிலுவையும் இன்றி காப்பீட்டுத் தவணை வழங்கப்படுகிறது. அவா்களும், தனியாா் மருத்துவமனைகளுக்கு 7 நாள்களுக்குள் சிகிச்சைக்கான தொகையை விடுவிக்கிறாா்கள். இந்த விவகாரத்தில் ஏதேனும் புகாா் எழுந்தால் அதனை நிவா்த்தி செய்ய ஒவ்வொரு திங்கள்கிழமையும் குறைதீா் கூட்டம் நடத்துகிறோம் என்றாா் அவா்.
104-இல் புகாரளிக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
முதல்வா் காப்பீட்டின் கீழ் சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
காப்பீட்டுத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,500 கோடியை அரசு செலவிடுவதாகவும், அதில் எந்த குறைகள் ஏற்பட்டாலும் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்றும் அவா் கூறினாா்.
கிராபிக்ஸ் தகவல்கள்...
1.48 கோடி- முதல்வா் காப்பீட்டு அட்டை குடும்பங்கள்
ரூ. 5 லட்சம்- காப்பீட்டுத் தொகை
2,053 - காப்பீட்டின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகள்
730 - அரசு மருத்துவமனைகள்
1,238 - தனியாா் மருத்துவமனைகள்

