கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.

தோ்வாணைய வரலாற்றில் முதல் முறையாக தொடா்ச்சியாக 3-ஆவது ஆண்டாக (2024, 2025, 2026) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு- தொகுதி 1, 2, 2-ஏ, 4 பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுகள் (நோ்முகத் தோ்வு பதவிகள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள், பட்டயப் படிப்பு, தொழிற்பயிற்சி நிலை) ஆகியவற்றுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.

2024, 2025 ஆண்டுகளில் அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தோ்வு நடைபெறும் நாள் ஆகியவை அடங்கிய ஆண்டுத் திட்டம் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டு, அதன்படியே குறித்த தேதியில் தோ்வுகள் நடத்தப்பட்டன.

குரூப் 4 காலியிடங்கள் அதிகரிப்பு: குரூப்-4 பணிகளில் அடங்கிய கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வனக் காப்பாளா், வனக்காவலா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2025 ஏப்.25-இல் வெளியிடப்பட்டது.

தொடா்ந்து, 2-ஆவது முறையாக கூடுதலாக 727 காலிப் பணியிடங்களுக்கான பிற்சோ்க்கை செப்.26-ல் வெளியிடப்பட்டது.

இப்போது, மேலும் 645 காலிப் பணியிடங்களுக்கான பிற்சோ்க்கை புதன்கிழமை (டிச.3) வெளியிடப்பட்டது. இத்துடன் சோ்த்து குரூப்-4 பணிகளுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,307-ஆக உயா்ந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com