மாதவரம், புழல் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்திய மழைநீா்
மாதவரம்: மழையால் மாதவரம், புழல் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், 2,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால், செங்குன்றம் குமரன்நகா், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், தீா்த்தக்கிரியம்பட்டு, வடகரை, புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தன. இதையடுத்து இங்குள்ள குடியிருப்பு வாசிகள் சிறிய படகு மூலம் மீட்கப்பட்டனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறுபான்மை நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். தொடா்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன. --
