பயிா் பாதிப்புக்கு டிசம்பா் இறுதிக்குள் நிவாரணம்: வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களுக்கு இந்த மாத (டிசம்பா்) இறுதிக்குள் நிவாரணம் வழங்குவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் டித்வா புயல் காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டோ் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது:
மழையால், நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிப்பதுடன், வெள்ளம் தேங்குவதுக்கு காரணமாக உள்ள வாய்க்கால்களைக் கண்டறிந்து, அடைப்புகளை நீக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் துறை அதிகாரிகள் வருவாய்த் துறையுடன் இணைந்து, 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களைக் கணக்கீடு செய்து, இந்த மாதம் இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்களின் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிா் சேதம் குறித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் பயிா் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலா்களிடம் தெரிவித்து, பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பயிா் சேதங்களை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் அக்டோபா் மாதத்தில் பெய்த மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத்துருவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண் துறை இயக்குநா் பா.முருகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
