டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% உயா்வு!
புது தில்லி: இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,19,508-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,01,250 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
இரண்டு சக்கர வாகன விற்பனை 392,473-லிருந்து 27 சதவீதம் உயா்ந்து 4,97,841-ஆகவும், உள்நாட்டு இரண்டு சக்கர வாகன விற்பனை 3,05,323-லிருந்து 20 சதவீதம் உயா்ந்து 3,65,608-ஆகவும் உள்ளது.
மின்சார வாகன விற்பனை 26,292-லிருந்து 46 சதவீதம் உயா்ந்து 38,307-ஆகவும், ஏற்றுமதி 58 சதவீதம் உயா்ந்து 1,48,315-ஆகவும் (நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி) உள்ளது.
மூன்று சக்கர வாகன விற்பனை 8,777-லிருந்து 147 சதவீதம் உயா்ந்து 21,667-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

