குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது.

டித்வா புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாள்களாக மழை பெய்துவருகிறது. வடசென்னைக்கு உள்பட்ட வியாசர்பாடி, ஓட்டேரி, கொளத்தூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை,

வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குளம்போல் தேங்கியது. மேலும், பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் கணேஷபுரம் சுரங்கப் பாதையில் 4 அடிக்கு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தேங்கிய தண்ணீர் மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டதால், பிற்பகலில் போக்குவரத்து தொடங்கியது.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை முல்லை நகர், அம்பத்தூர் சிடிஎச் சாலை, பெருங்குடி கொட்டிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மின்மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் உதவியுடன் மாநகராட்சியினர் அகற்றினர்.

உணவு விநியோகம், மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 2.74 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அத்துடன் வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் இலவச மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

தண்டவாளத்தில் நீர் அகற்றம்: சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

நீச்சல் குளமாக மாறிய நீலக்கொடி கடற்கரைப் பகுதி

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரீனா கடற்கரைக்கு, சர்வதேச அளவிலான சுற்றுலா தளமாக அங்கீகரிக்கப்படும் நீலக்கொடி கடற்கரையாக சான்று பெறப்பட்டுள்ளது.

தற்போது பெய்த மழையால் அங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கி நீச்சல் குளம்போல காட்சியளிக்கிறது. இதையடுத்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல், கடற்கரையோரமுள்ள பட்டிணம்பாக்கம் மீன் அங்காடி அருகேயுள்ள குடியிருப்புகளின் கீழ்ப்பகுயிலும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புகார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com