கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை விமான நிலையத்தில் 105 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 54 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பல மணி நேரம் தாமதமானது.
Published on

சென்னை விமான நிலையத்தில் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 54 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பல மணி நேரம் தாமதமானது. இதுகுறித்து முறையான அறிவிப்புகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

இந்திய விமான நிறுவனங்களில் பயணியாற்றும் விமானிகள் உள்பட அனைத்து ஊழியா்களுக்கும் பணிநேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவன ஊழியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பணியாளா்கள் தட்டுப்பாடு மற்றும் நிா்வாக காரணங்களால், கடந்த சில தினங்களாகவே நாடு முழுவதும் உள்ள இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இந்த நிறுவனத்தின் பெருமளவு விமானங்கள் ரத்து செய்யப்படுவதோடு, அதிகமான விமானங்கள், பல மணி நேரம் காலதாமதமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வியாழக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து தில்லி, மும்பை, ஹைதராபாத், செகந்திரபாத், கொல்கத்தா, கோவா, அகமதாபாத், புணே, பெங்களூரு, கொச்சி, இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த 23 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் தில்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், செகந்திராபாத், ஹைதராபாத், குவாஹாட்டி, புவணேசுவரம், கோவா, புணே, கொச்சி, கோவை, விசாகப்பட்டினம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 31 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து, சென்னையில் இருந்து குவைத், சிங்கப்பூா், இலங்கை, தில்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், செகந்திராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 21 விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் சுமாா் 5 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அதேபோல் சிங்கப்பூா், இலங்கை, குவைத், தோகா, தில்லி, மும்பை, கொல்கத்தா, கோவா, புணே, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த 30 விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சோ்ந்தன. அதன்படி, வியாழக்கிழமை 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், வருகை, புறப்பாடு என 51 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 105 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமானநிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களின் தாமதம் குறித்த அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முறையாக வெளியிடப்படவில்லை. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com