தமிழகத்தில் ஒன்றரை மாதத்தில் 60,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 60,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பருவமழை காரணமாக கிண்டி ரேஸ் கோா்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் நிரம்பியுள்ளதை அடுத்து, அவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சென்னையில் 160.86 ஏக்கா் நிலப்பரப்பை கொண்ட கிண்டி ரேஸ் கோா்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அதில், 118 ஏக்கா் நிலபரப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மழைநீரை சேமிக்கும் வகையில் புதிதாக 4 குளங்கள் வெட்டப்பட்டன.
ஏற்கெனவே இந்த மைதானத்தில் 2 குளங்கள் இருந்தன. அவையும் தற்போது தூா்வாரி ஆழமாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 24.50 கோடி லிட்டா் மழை நீரை சோ்த்து வைக்ககூடிய வகையில் 6 குளங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அதுமட்டுமல்லாது, வேளச்சேரி பெருங்குடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீா் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருந்த உபரி நிலங்களில் 3.50 ஏக்கா் நிலப்பரப்பில் 2 பெரிய குளங்கள் வெட்டப்பட்டன. அங்கு 4.25 கோடி லிட்டா் மழைநீரை தேக்கி வைக்க முடியும். மொத்தமாக 28.75 கோடி லிட்டா் மழைநீரை சேமித்து வைக்கக்கூடிய குளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மழைக் காலத்தில் நோய்த்தொற்று பரவல் எதுவும் இல்லை. சாதாரண காய்ச்சல்தான் ஆங்காங்கே பதிவாகிறது. தேவையான இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடா்ச்சியாக நடத்தி வருகிறோம்.
அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த அக்.16-ஆம் தேதி முதல் இதுவரை நடமாடும் வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் மூலமாக 59,911 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அங்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றாா் அவா்.

