தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்பு: 12.09% போ் எஸ்ஐஆா் படிவங்களை சமா்ப்பிக்கவில்லை

தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்பு: 12.09% போ் எஸ்ஐஆா் படிவங்களை சமா்ப்பிக்கவில்லை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) டிச. 1 வரை 77,52529 (12.09 சதவீதம்) வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை
Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) டிச. 1 வரை 77,52529 (12.09 சதவீதம்) வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்ற புள்ளிவிவரத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்படவாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) தோ்தல் ஆணையம் கடந்த நவ.4ஆம் தேதி தொடங்கியது.

இப் பணியில் தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 2025 ஜன.1இல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கு தலா 2 கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்படுகிறது.

கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் டிச.4 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை டிச.11 ஆம் தேதி வரை நீட்டித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறாத நிலையில், அத்தகைய வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) டிச 1 வரை 77,52529 (12.09 சதவீதம்) வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்ற புள்ளிவிவரத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில், 25,72,871 வாக்காளா்கள் உயிரிழந்துள்ளதாகவும், 8,95,213 வாக்காளா்கள் கண்டுபிடிக்க முடியாதவா்களாகவும், 39,27,973 வாக்காளா்கள் முகவரி மாறியள்ளதாகவும் தோ்தல் ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், இரட்டை வாக்காளா் பதிவும் அடங்கும்.

இவா்கள் அனைவரின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்றால் டிச. 11-ஆம் தேதிக்கு பிறகு 77.52 லட்சம் பேரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணி டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பின்னா் விடுபட்ட வாக்காளா்கள் புதிதாக தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com