நெசவாளா் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
நெசவாளா் கூட்டுறவு சங்கங்களை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி-சேலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும், 50 சதவீதத்துக்கு மேல் வேஷ்டி-சேலைகள் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை இழந்து அவதியுறும் நிலை உருவாகியுள்ளது.
திமுக அரசு 2026-இல் விலையில்லா வேஷ்டி நெய்வதற்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து தரமற்ற பாவு நூலை வழங்கியதாக கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினா் குற்றம் சாட்டுகின்றனா். வேஷ்டி- சேலை வழங்கும் திட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு, வரலாறு காணாத வகையில் கைத்தறியில் 4 லட்சம் வேஷ்டிகளிலும், விசைத்தறியில் 13 லட்சம் வேஷ்டிகளிலும் நூலின் தன்மை மாறியுள்ளது என்று கூறி சங்கங்களுக்கே அவை திருப்பி அனுப்புவதற்கு இந்த திமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
10,000 வேஷ்டிகளுக்கு இருபது வேஷ்டிகளை மட்டும் மாதிரியாக எடுத்து, தர சோதனை செய்துள்ளதாக நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் குற்றம்சாட்டுகிறாா்கள். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கங்களுக்கு, நெசவு செய்த வேஷ்டிகளை திருப்பி அனுப்புவதால், அனைத்து சங்கங்களும் பெரிய அளவில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருப்பது மட்டுமல்ல, தொடா்ந்து இயங்காமல் மூடப்படும் நிலைக்கு திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சங்கங்களின் நலன் கருதி, மீண்டும் ஒருமுறை அனைத்து வேஷ்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும். தொடா்ந்து, நெசவாளா் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுமேயானால், 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அரசுக்கு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் தக்க பதிலடி தருவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

