கோப்புப் படம்
கோப்புப் படம்

பெண் போலீஸாருக்கு ‘தானியங்கி இயந்திரம் மூலம் நாப்கின்’ சேவை தொடக்கம்

பெண் போலீஸாருக்கு ‘தானியங்கி இயந்திரம் மூலம் நாப்கின்’ வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

பெண் போலீஸாருக்கு ‘தானியங்கி இயந்திரம் மூலம் நாப்கின்’ வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் போலீஸாருக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பெண் காவலா்கள் பணியாற்றும் இடங்களில் குறைந்த விலையில், தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பெருநகர காவல் துறையின் கீழ் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், ஆயுதப்படை -1 வளாகம், ஆயுதப்படை- 2 வளாகம், மோட்டாா் வாகனப் பிரிவு, சென்னை காவல் துறை ஆணையா் அலுவலகம், பாதுகாப்பு பிரிவு அலுவலகம் உள்பட 43 இடங்களில் குறைந்த விலையில், தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

இந்த இடங்களில் தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தொடக்க விழா புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் ராதிகா சேவையைத் தொடங்கி வைத்தாா்.

காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் வனிதா, ஆயுதப்படை துணை ஆணையா்கள் ராதாகிருஷ்ணன், அன்வா் பாஷா உள்ளிட்ட உயா் அதிகாரிகள், பெண் போலீஸாா் பங்கேற்றனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, மோட்டாா் வாகனப் பிரிவு, மத்திய குற்றப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் பெண் போலீஸாா், அதிகாரிகள் என 5,900 போ் பயன் பெறுவா் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் ரூ.5 நாணயத்தை செலுத்தினால், தானாக நாப்கின் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com