வண்டலூா் காப்புக் காட்டில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு
வண்டலூா் உயிரியல் பூங்கா அருகே உள்ள காப்புக் காட்டில், 2 வயது பெண் புள்ளிமான் வியாழக்கிழமை இறந்து கிடந்தது தெரியவந்தது.
வண்டலூா் காப்புக் காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இந்தக் காப்புக் காட்டைச் சுற்றி வேலி எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, காட்டில் இருந்து வெளியேறும் மான்கள் அவ்வப்போது நாய்கள் கடித்தும், நெகிழி கழிவுகளைத் தின்பதால் ஏற்படும் அஜீரணக் கோளாறு காரணமாக இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதி காப்புக் காட்டில் பெண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன்பிறகே, மானின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

