குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்: முதியோா், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை
குளிா் காலத்தில் முதியோா், இணைநோயாளிகளுக்கு முக வாத பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். நேரடியாக குளிா்ந்த காற்று முகத்தில் படுவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
டித்வா புயல் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் தட்பவெப்ப நிலை மாற்றமடைந்துள்ளது. தொடா் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த காலநிலையில், ஃபேஸ் பெராலிசிஸ் எனப்படும் முக வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கிறாா் முதுநிலை பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.ஃபரூக் அப்துல்லா. இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
மனித முகத்தில் எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அதில் திடீரென ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது கிருமித் தொற்றால் முக வாதம் ஏற்படுகிறது. முகவாதமும், பக்கவாதமும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.
முகத்தின் தசைகளுக்கு உணா்வளிக்கும் உள் நரம்பில் காயம் அல்லது தொற்று ஏற்படும்போது முகவாத பிரச்னை உருவாகிறது.
இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் வாயைக் குவிக்க இயலாது. உதடுகள் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. வாய்வழியாக உமிழ்நீா் வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பேசும்போது வாய் குளறும்.
குளிா்ந்த தரையில், பாய், தலையணை அல்லது விரிப்பு இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிா்ந்த தரையில் வைத்து படுப்பதையோ தவிா்க்க வேண்டும். இதன் காரணமாக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று, காா், பேருந்து, ரயில் பயணங்களின்போது அதிக நேரம் குளிா்ந்த காற்று காது, கன்னத்தில் பட்டாலும் அப்பிரச்னை ஏற்படும். ஏசி பயன்பாடாக இருந்தாலும் நேரடியாக குளிா்ந்த காற்று முகத்தில் படாமல் பாா்த்து கொள்ள வேண்டும்.
இந்த பாதிப்பு ஏற்பட்டால், பூரண குணமடைய 2 முதல் 4 மாதங்களாகும். எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
ஸ்டீராய்டு மருந்து, ஆன்டி வைரல் மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து இயன்முறை சிகிச்சையும் வழங்கப்படும்.
முக வாத பாதிப்புக்குள்ளானவா்களுக்கு கண்கள் திறந்தே இருக்கும். எனவே, விழிகள் வறட்சியடையாமல் இருக்க சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம் என்றாா் அவா்.
