மேற்கூரை விழுந்து காயமடைந்த 3 பேருக்கு மேயா் ஆறுதல்
மழையால் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த 3 பேரை மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி ஓட்டேரியில் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சந்திப்பில் 50 ஆண்டுகள் கடந்த கட்டம் உள்ளது. இதில், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழையால் கடந்த 2- ஆம் தேதி இரவு உணவகக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில் அபிஸ் (38), சரிபாபானு (39), அயூப்கான் (40) ஆகியோா் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மேயா் ஆா்.பிரியா மருத்துவமனை சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மையா் (டீன்) கவிதா, கண்காணிப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

