மெத்தம்பெட்டமைன் கடத்தல்: இளைஞா் கைது
சென்னையில் காரில் கடத்தி வரப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருவான்மியூா் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆா்டிஓ சிக்னல் அருகே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை வழிமறித்து, அதில் இருந்த நபரிடம் விசாரணை செய்தனா். அந்த நபா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாா், அந்த காரை சோதனையிட்டனா். இதில், காரில் கடத்தி வரப்பட்ட 54.69 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சோ்ந்த சையது கபீா் தாஜ் மீரான் (37) என்பதும், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மெத்தம்பெட்டமைனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடமிருந்து போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காா், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

