நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து
மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய, கடுமையான ‘விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.
இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 95 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், ஹைதராபாதில் 70 விமானங்கள், பெங்களூருவில் 50 விமானங்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.
புதிய விதிகளை அமல்படுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்தும், இண்டிகோ போதுமான விமானிகளை பணியில் சோ்க்காமல் தவறிழைத்துவிட்டது என்று இந்திய விமானிகள் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘இண்டிகோவால் பயணிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாவிட்டால், இந்த விடுமுறைக் காலத்தில் பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இண்டிகோவின் விமானச் சேவை ஒதுக்கீட்டை மற்ற தகுதிவாய்ந்த விமான நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்’ என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தை (டிஜிசிஏ) விமானிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
அரசின் நடவடிக்கை: இண்டிகோ விமான சேவையில் நிலவும் குழப்பம் குறித்து டிஜிசிஏ விசாரித்து வருகிறது. மேலும், இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்வதற்கான திட்டத்தைச் சமா்ப்பிக்குமாறு இண்டிகோவிடம் அரசு வலியுறுத்தியுள்ளது.

